தமிழில் உதவி மற்றும் ஆதரவு : Trosolwg
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்றால் என்ன?
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நிகழும் ஓர் ஆய்வு ஆகும். அது, இங்கிலாந்திலும் வேல்ஸிலும் உள்ள அனைத்து மக்களதும் வீட்டுக் குடியிருப்பாளர்களதும் விவரணம் ஒன்றை எங்களுக்கு வழங்குகிறது. அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2021 மார்ச் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் உள்ளூர் பகுதிகளில், மொழிச் சேவைகள் உட்படப், பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளைத் திட்டமிடவும் அவற்றுக்கு நிதி வழங்கவும் எங்களுக்கு உதவுகிறது. உதாரணமாக, சில பகுதிகளில் தேசிய சுகாதார சேவைக்கு (NHS) மொழிபெயர்ப்பு மற்றும் உரை மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்கும் தேவை ஏற்படலாம்.
The Office for National Statistics (தேசிய புள்ளிவிபரத் தொகுப்புக்கான அலுவலகம்) (ONS) மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இங்கிலாந்திலும் வேல்ஸ்-இலும் திட்டமிட்டு நடத்தி வருகிறது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பை யார் பூர்த்தி செய்தல் வேண்டும்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, உங்களைப் பற்றியும் உங்கள் குடியிருப்பில் உள்ளவர்களைப் பற்றியும் வினாக்களை எழுப்பும். இங்கிலாந்திலும் வேல்ஸ்-இலும் உள்ள ஒவ்வொருவரும் இதில் பங்குபற்றுவது முக்கியம்.
நீங்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்தல் சட்டப்படி அவசியமாகும்.
பொய்யான தகவல்களை வழங்குவது அல்லது மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்யாமல் விடுவது குற்றமாகும். உங்களுக்கு £1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். சில வினாக்கள் விருப்பமானால் விடை தரலாம் எனத் தெளிவாகப் பெயரிடப்பட்டுள்ளன. இவற்றுக்கு நீங்கள் விடை அளிக்காவிட்டால் அது குற்றமாகாது.
ஐக்கிய இராச்சியத்தில் மூன்று மாதங்களுக்குக் குறைவாகத் தங்குதல்
நீங்கள் ஐக்கிய இராச்சியத்தில் மூன்று மாதங்களுக்குக் குறைவாகத் தங்குவதானால், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு உங்களுக்கு இருக்காது. உங்கள் இருப்பிடத்தின் உரிமையாளர் உங்களிடம் சில வினாக்களை வினாவுவார். தனது குடியிருப்பில் தங்குபவர்கள் பற்றி அவரே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நிரப்புவதற்காக அவர் இவ்வாறு செய்வார்.
உங்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எப்போது பூர்த்தி செய்தல் வேண்டும்
குடியிருப்புக்கள் அனைத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை 2021 மார்ச் 21 அன்று அல்லது அதன்பின் கூடிய விரைவில் பூர்த்தி செய்தல் வேண்டும்.
கொரோனாவைரஸ் பெருந்தொற்றின் விளைவாக உங்கள் சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். தற்போதுள்ள உங்கள் சூழ்நிலையின் அடிப்படையில் உங்கள் விடைகள் அமையவேண்டும்.